நிலத்துக்கு 30 ஆண்டுகளாக இழப்பீடு தரல வீட்டுவசதி வாரிய ஆபீஸில் பொருட்கள் ஜப்தி
சேலம்: இழப்பீடு வழங்காததால், சேலம் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் இருந்த பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட கொண்-டிப்பட்டி, வகுரம்பட்டி, முத்தனம்பாளையம், திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி, காடச்சநல்லுார், பள்ளிப்பாளையம், புதுப்பாளையம் பகுதிகளில், 1977-86 வரையிலான காலகட்டத்தில், 600 ஏக்கர் நிலத்தை சேலம் வட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் அடுத்தடுத்து கையகப்படுத்-தப்பட்டன. அதற்கு விலையாக சதுரடி, 37 காசு முதல், 50 காசு வரை வழங்கப்பட்டது. ஆனால் நிலம் கொடுத்த, 16 வகையறாக்கள் சார்பில் சதுர-டிக்கு, 10 ரூபாய் கேட்டு, சேலம் கூடுதல் முத-லாவது சார்பு நீதிமன்றத்தில், 1992ல், வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவில் சதுரடிக்கு, 3.5 ரூபாய் வழங்கும்படி, வீட்டுவசதி வாரியத்-துக்கு உத்தரவிட்டு, 1995, செப்.,29ல், நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆனால், 15 ஆண்டுகளாக வீட்டுவசதி வாரியம், மாவட்ட நிர்வாகமும் நீதிமன்ற தீர்ப்பை கண்டுகொள்ளாததால், நிலம் கொடுத்த-வர்கள் தரப்பில், 2010ல், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில், சேலம் கலெக்டர் அலுவலகத்திலும், வட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்-திலும் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு பிறகும், 14 ஆண்டுகளாக வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் நீதிமன்ற உத்தரவு கிடப்பில் போடப்பட்டன.எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அமீனாக்கள், நேற்று முன்தினம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு பிரிவில் சீலிங் பேன், கணினி, சேர் உள்ளிட்ட தளவாட பொருட்களை ஜப்தி செய்தனர். அதனை தொடர்ந்து, நீதிமன்ற அமீனாக்கள் ஜோசப், ரமேஷ், தங்கராஜ், இந்திரா, கலாவதி உள்ளிட்டோர், நேற்று காலை, 11:45 மணிக்கு சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள வட்ட வீட்டுவசதி வாரிய அலுவலகம் சென்றனர். அப்போது, 'இந்த விவகாரத்தில், 4.33 கோடி ரூபாயை, மூன்று மாதத்துக்குள் பட்டுவாடா செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள, செயற்பொறியாளர் கணேசன் சென்னை சென்-றிருப்பதாக' உதவி பொறியாளர் அற்புதம் பதி-லளித்தார்.அதை ஏற்காத அமீனாக்கள், நீதிமன்ற உத்த-ரவை காட்டி ஜப்தி நடவடிக்கை மேற்கொண்-டனர். அதன்படி, 5 கணினி, ஸ்டீல் சேர், 4, ஒரு ஸ்டீல் டேபிள் ஆகியவற்றை ஜப்தி செய்தனர். ஜப்தி பொருட்களின் பட்டியல் தயாரித்து, அதில் அற்புதத்திடம் கையெழுத்து பெற்று, அதன் நகலை அவரிடம் வழங்கினர். மேலும், நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்ட மூன்று கார், ஜீப் உள்-ளிட்ட வாகனங்கள் அங்கு இல்லாததால், ஜப்தி செய்ய முடியாமல் திரும்பினர்.