உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எல்லையில் 6 சோதனை சாவடி 2 மாநில வியாபாரிகள் கலக்கம்

எல்லையில் 6 சோதனை சாவடி 2 மாநில வியாபாரிகள் கலக்கம்

மேட்டூர்:தமிழகம் - கர்நாடகா எல்லை குறுக்கே, காவிரியின் துணை நதிகளின் ஒன்றான பாலாறு செல்கிறது. அதன் குறுக்கே ஈரோடு - மைசூரு நெடுஞ்சாலையில் பாலம் உள்ளது. பாலத்தின் ஒரு கரையில் கர்நாடகா வனத்துறை சோதனைச்சாவடி உள்ளது. மறுகரையில் உள்ள எல்லையில் தமிழக வனத்துறை சோதனைச்சாவடி இருந்தது. ஆனால், 1982ல் கொளத்துாருக்கு இடமாற்றப்பட்டு அங்கேயே செயல்படுகிறது.சில மாதங்களுக்கு முன் சேலம், ஈரோடு கலெக்டர்கள், வன அதிகாரிகள், பாலாறு வன எல்லையிலுள்ள காரைக்காட்டில் ஆய்வு செய்தனர். அப்போது தமிழக எல்லையில் வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அதற்கான பணி நடந்து முடிந்து கடந்த, 1 முதல், பாலாறு பாலத்தின் ஒருபுறம் தமிழகத்தில், சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சோதனைச்சாவடி இயங்க துவங்கியது.ஏற்கனவே கர்நாடகா மாநிலம் மாதேஸ்வரன் மலை கோவில் நிர்வாகம் சார்பில், அக்கோவில் அருகே தமிழக வாகனங்கள் செல்லும் பகுதியிலும், கர்நாடகாவில் இருந்து வாகனங்கள் வரும் பகுதியிலும் இரு சோதனைச்சாவடிகள் உள்ளன.இது தவிர, தமிழக எல்லையில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இதன் வாயிலாக, மேட்டூரில் இருந்து கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் பகுதிக்கு செல்ல, 6 சோதனைச்சாவடிகளை கடக்க வேண்டியுள்ளதால், இரு மாநில எல்லை வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ