உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊருக்குள் வராத பஸ் சிறைபிடிப்பு போலீஸ் சமரசத்தால் விடுவிப்பு

ஊருக்குள் வராத பஸ் சிறைபிடிப்பு போலீஸ் சமரசத்தால் விடுவிப்பு

ஓமலுார், ஆக. 29-ஊருக்குள் வராத டவுன் பஸ்சை, பையூரான் கொட்டாய் கிராம மக்கள் சிறைபிடித்தனர். பின் போலீசார், நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், பஸ்சை விடுவித்தனர்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, குண்டுக்கல் ஊராட்சியில் பையூரான் கொட்டாய் கிராமம் உள்ளது. அந்த கிராமம் வழியே, தொப்பூரில் இருந்து டவுன் பஸ் சென்று வந்தது. ஆனால் அந்த ஊருக்கு வரும் வழி, ஏரிக்கரை அருகே திறந்தவெளி கிணறு சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் உள்ளது. அத்துடன் சில வாரங்களாக பெய்த மழையால் கிணறு பகுதி மேலும் சேதமாக, அந்த வளைவில் டவுன் இயக்க முடியாது என்பதால் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது.இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், நேற்று காலை, 9:30 மணிக்கு கொட்டாலுார் புதுார் பிரிவு சாலையில் வந்த டவுன் பஸ்சை சிறைபிடித்து ஊருக்குள் வந்து செல்ல கோரிக்கை விடுத்தனர். அங்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார், மக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, 'மற்றொரு பஸ் அதே வழியில் சென்று வருகிறது. இந்த பஸ் மட்டும் இயக்கப்படவில்லை' என, மக்கள் குற்றம்சாட்டினர். அதற்கு, 'ஒரு வாரத்தில் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் கூறினர். இதனால் பஸ்சை விடுவித்து மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், 45 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ