108 ஆம்புலன்ஸ் பைலட் தினம் இருவருக்கு பாராட்டு சான்றிதழ்
ஓமலுார், சேலத்தில், 108 ஆம்புலன்ஸ் 'பைலட்' தினம் கொண்டாடப்பட்டு, சிறப்பாக பணியாற்றிய இருவருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.சேலம் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள், போலீஸ் ஸ்டேஷன், பொதுமக்கள் கூடும் பகுதி என, 52 இடங்களில் மொத்தம், 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 121 பைலட் (ஓட்டுனர்) மற்றும் 121 மருத்துவ உதவியாளர்கள் உள்ளனர். நேற்று ஆம்புலன்ஸ் 'பைலட்' தினம், மண்டல மேலாளர் ஜெயக்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பாக செயல்பட்ட, சேலம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் பைலட் அசோக்குமார், நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பைலட் அஜித்குமார் ஆகியோரை, சேலம் மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குனர் நந்தினி பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்கினார். சேலம் மாவட்ட, 108 ஆம்புலன்ஸ் மேலாளர் அறிவுக்கரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ்குமார், ராஜேஸ்குமார், அருண் ஆகியோர் உடனிருந்தனர்.