உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நெடுஞ்சாலையோர தடுப்புச்சுவரில் சொருகிய கார் கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் பலி; 3 பேர் கவலைக்கிடம்

நெடுஞ்சாலையோர தடுப்புச்சுவரில் சொருகிய கார் கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் பலி; 3 பேர் கவலைக்கிடம்

வாழப்பாடி, :வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதை தடுப்புச்சுவரில் சொருகி நின்றதில், கர்நாடகாவை சேர்ந்த, 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நடைபாதை தடுப்புச்சுவர் மீது, நேற்று மாலை, 4:30 மணிக்கு, 'இன்னோவா' கார் மோதியது. குறிப்பாக அந்த தடுப்புச்சுவரை உடைத்து உள்ளே சென்று சொருகி கார் சிக்கிக்கொண்டது. அப்போது காரின் பாகங்கள் உடைந்து சிதறின. இதில் காரில் வந்த, 7 பேரும் படுகாயம் அடைந்து சிக்கிக்கொண்டனர்.இதை அறிந்து, வாழப்பாடி போலீசார் விரைந்து வந்து, 'கிரேன்' உதவியுடன் தடுப்புச்சுவரை உடைத்து, அதில் சிக்கியிருந்த காரை மீட்டனர். தொடர்ந்து காருக்குள் சிக்கியிருந்த, 7 பேரையும் மீட்டனர். ஆனால், 3 பேர் இறந்துவிட்டது தெரிந்தது. படுகாயம் அடைந்திருந்த, 4 பேரை, வாழப்பாடியில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். அதில் மேலும் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்தில், வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் குடும்பத்தினர் ஒன்றாக காரில், திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலுக்கு சென்றனர். பின் நாளை(இன்று) ஈரோட்டில் நடக்க உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு புறப்பட்டனர். காரை, ஜோகாராம், 59, என்பவர் ஓட்டினார். இதில் அவர்களது குடும்பத்தினர் உள்பட, 7 பேர் பயணம் செய்தனர். இதில் ராணாராம், 55, அவரது மனைவி ஜோதிதேவி, 50, ராணாராமின் அண்ணனான ஜோகாராம், 59, ஜோகிதேவி, 55, ஆகியோர் உயிரிழந்தனர். தவிர, அம்மியா, 43, ஜோதாராம், 65, ஜோகிதேவி, 57, ஆகியோர் படுகாயம் அடைந்து, சேலத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் அதிவேகமாக வந்த நிலையில், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ