மேலும் செய்திகள்
ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்
01-May-2025
ஓமலுார்:புதிதாக கட்டப்பட்ட சந்தை வளாகத்தில், ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு கடைகள் ஒப்படைக்கப்பட்டதாக கூறி, வியாபாரிகள், முற்றுகை போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 44 வியாபாரிகளை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்து வழக்குப்பதிந்தனர்.சேலம் மாவட்டம் ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், தினசரி காய்கறி சந்தை செயல்பட்டது. 180 பேர் வியாபாரம் செய்தனர். நிழலுடன் கூடிய புது கடைகள் கட்டித்தரக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி ஓமலுார் டவுன் பஞ்சாயத்து சார்பில், 65 லட்சம் ரூபாயில், 40 கடைகள் கட்டப்பட்டு, அமைச்சர்கள் நேரு, ராஜேந்திரன், இரு மாதங்களுக்கு முன் திறந்து வைத்தனர். அப்போது ஓமலுார் காய்கறி வியாபாரி சங்கம் சார்பில், 'எங்களுக்கும் கடைகள் ஒதுக்க வேண்டும்' என, அமைச்சரிடம் மனு வழங்கினர்.ஆனால் சந்தை ஏலம் எடுத்தவர்கள், அவர்கள் தேர்வு செய்யும் நபர்களுக்கு மட்டும் கடை வைக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனால் புது இடத்தில் யாரும் கடைகள் அமைக்காமல், வழக்கம்போல் தரையில் கடை வைத்து வியாபாரம் நடத்தினர்.நேற்று காலை, டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி, தேர்வு செய்யப்பட்ட, 40 பேருக்கு கடைகளை ஒப்படைத்தார். மேலும் சந்தை வளாகம் அருகே, காலியாக உள்ள தரையில், 40 கடைகளுக்கு கோடு வரையப்பட்டு, அந்த கடைகளையும் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு உடனடியாக ஒப்படைத்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தினசரி காய்கறி சங்க வியாபாரிகள், 50க்கும் மேற்பட்டோர் புது சந்தை வளாகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார் கைது செய்து, டவுன் பஸ்சில் ஏற்றினர். சிலர், பஸ்சில் இருந்து இறங்கி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, 'பல ஆண்டாக வியாபாரம் செய்யும் எங்களை அகற்றிவிட்டு, ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களுக்கு கடைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன' என, வியாபாரிகள் ஆதங்கத்தை தெரிவித்தனர். இதனால் ஓமலுார் - தர்மபுரி நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், போராட்டத்தில் ஈடுபட்ட, 44 பேரை கைது செய்து, வலுக்கட்டாயமாக மண்டபத்துக்கு இழுத்துச்சென்று அடைத்தனர். மாலையில் விடுவித்த போலீசார், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 44 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.இதனிடையே புது சந்தை வளாகத்தில் காய்கறி விற்பனையை தலைவி செல்வராணி தொடங்கி வைத்தார். துணைத்தலைவி புஷ்பா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து செல்வராணி கூறுகையில், ''தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு கடைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடை வேண்டும் என கேட்டால், இடம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
01-May-2025