கரபுரநாதர் கோவிலில் புது கொடிமரம் இன்று பிரதிஷ்டை
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் மூலவர் பெரிய நாயகி அம்மன், கரபுரநாதரை தவிர ராஜகோபுரம் மற்ற பரிவார தெய்வங்களுக்கு, 2022 ஆக., 22ல் பாலாலயம் செய்து கும்பாபிேஷக திருப்பணி தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பழைய கொடி மரம் அகற்றப்பட்டு, 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில், உபயதாரரால் புது கொடி மரம் செதுக்கி சீர் செய்யப்பட்டது. 15 நாட்களாக கொடி மரத்தை துணியால் சுற்றி அதன் மீது வேப்பம், புங்க, இலுப்ப, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய பஞ்ச எண்ணெய்களை கலந்து சூடாக்கி ஊற்றி, 'திரவியாதிவாசம்' என்ற எண்ணெய் காப்பு செய்து ஊற வைத்திருந்தனர்.இரு நாட்களுக்கு முன் கொடி மரத்தை, எண்ணெய் துணிகளை அகற்றி சுத்தம் செய்து பூமியில் புதைக்கும் அளவுக்கு மரத்தை சுற்றி செம்பு தகடு பதிக்கப்பட்டது. நேற்று பக்தர்கள் உதவியுடன், பிரதிஷ்டை செய்யப்பட உள்ள இடத்துக்கு கொடி மரத்தை எடுத்து வந்து தயாராக வைக்கப்பட்டது. இன்று காலை, 10:00 மணிக்கு மேல், 11:00 மணிக்குள் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து, கோவில் செயல் அலுவலர் சோழமாதேவி, உபயதாரர்கள், பக்தர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.