ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு மின்சார சைக்கிள் வசதி ஆத்துார் வனத்துறையினர் துவக்கி வைப்பு
ஆத்துார்: ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில், மின்சார சைக்கிள் வசதியை ஆத்துார் வனத்துறையினர் துவக்கி வைத்தனர்.ஆத்துார் அருகே, கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள முட்டல் ஏரி மற்றும் பூங்கா, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. முட்டல் ஏரியில் இருந்து, ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு செல்வதற்கு, 5 கி.மீ., துாரம் உள்ளதால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதில் சிரமப்பட்டனர். சுற்றுலா பயணிகளுக்கு, மின்சார பேட்டரியில் இயங்கும் சைக்கிளை, ஆத்துார் வனச்சரகர் ரவிபெருமாள் அறிமுகம் செய்து, துவக்கி வைத்தார். சுற்றுலா பயணிகளுக்கு, சைக்கிள் எடுத்துச் செல்வதற்கு, டிபாசிட் தொகை, 100 ரூபாயும், ஒரு மணி நேரத்திற்கு, 50 ரூபாய் என, கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். மின்சார பேட்டரி சைக்கிள், சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.