வீட்டை காலிசெய்ய அண்ணன் மகள் மிரட்டல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் தவிப்பு
சேலம், நவ. 16-சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த நாச்சினம்பட்டியை சேர்ந்தவர் ரவி, 58. இவர் மனைவி, மகள்களுடன், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.தொடர்ந்து ரவி கூறியதாவது:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான், ஒமலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். 5 ஆண்டுக்கு முன் அரசு வழங்கிய, 2 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வசிக்கிறேன். மனைவி, கூலி வேலை செய்யும் வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது. அதே பகுதியில் வசிக்கும் அண்ணன் மகள், வீட்டை காலி செய்யும்படி தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.கடந்த, 13ல் வீட்டை பூட்டி மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது அண்ணன் மகள், கதவை உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி விட்டார். இதுகுறித்து கேட்டபோது அடியாட்களை வைத்து அண்ணன் மகள், கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விசாரித்த தீவட்டிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.