மண்ணெண்ணெய் வழங்கியதாக குறுந்தகவல் அதிர்ச்சியில் கார்டுதாரர்கள் சாலை மறியல்
மேட்டூர், ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்காத நிலையில், வழங்கியதாக, மொபைல் போன்களுக்கு வந்த குறுந்தகவலால் அதிர்ச்சி அடைந்த கார்டுதாரர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி கோவிந்தபாடியில் செட்டிப்பட்டி - 1 ரேஷன் கடை உள்ளது. கடை பணியாளராக ரங்கசாமி உள்ளார். 300க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர். நேற்று உணவு வழங்கல் துறையில் இருந்து, அந்த கார்டுதாரர்களுக்கு, மண்ணெண்ணெய் வழங்கியதாக, மொபைலுக்கு குறுந்தகவல் வந்தது. ஆனால் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. அதிர்ச்சி அடைந்த கார்டுதாரர்கள், 30க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை, 5:00 மணிக்கு மேட்டூர் - மைசூரு நெடுஞ்சாலையில், கோவிந்தபாடி பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மேட்டூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜெயமணி வந்து, பேச்சு நடத்தி, 'நாளை(இன்று) நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தார். தொடர்ந்து, ஒரு மணி நேர மறியலை, கார்டுதாரர்கள் கைவிட்டனர்.