காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை வரும் 24ல் தலைகாவிரியில் தொடக்கம்
மேட்டூர் : காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை, வரும், 24ல், கர்நாடகாவின் தலைகாவிரியில் தொடங்க உள்ளது.அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், 15ம் ஆண்டாக, காவிரி நதிநீர் விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை, வரும், 24ல், கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் தலைகாவிரியில் தொடங்க உள்ளது. தொடர்ந்து திரிவேணி சங்கமம், ராமநாதபுரம், பெங்களூரு, ஓசூர், ராயக்கோட்டை வந்து, அக்., 30ல் ஒகேனக்கல், அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்தில், காவிரிக்கு வழிபாடு நடக்க உள்ளது. பின் பென்னாகரம், மேச்சேரி சென்று, அன்று மாலை, 6:00 மணிக்கு, மேட்டூர் காவிரி படித்துறை, தொடர்ந்து சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், யாத்திரைக்கு வரவேற்பு நடக்க உள்ளது. இறுதியாக நவ., 16 காலை, பூம்புகார் நுழைவாயில், ரத்னபூர்ணேஸ்வரி அம்மன் கோவில், காவிரி சங்கம படித்துறையில், யாத்திரை நிறைவடையும்.இதன் ஏற்பாடுகளை தமிழக, கர்நாடகா அன்னை காவிரி துலா ரத யாத்திரை தலைமை ஒருங்கிணைப்பாளர் நாகேஸ்வரானந்த சரஸ்வதி, அகில பாரத சந்நியாசிகள் சங்க, தமிழக ஒருங்கிணைப்பாளர் பாலரகுநாதானந்தனபுரி, பொதுச்செயலர் வேதாந்த ஆனந்தா, இணை ஒருங்கிணைப்பாளர் கோரஷானந்த சரஸ்வதி, பொருளாளர் சிவராமானந்தா உள்ளிட்ட சுவாமிகள் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.இதுகுறித்து குழுவினர் கூறியதாவது:காவிரியை மக்கள் வழிபட்டு தாயாக போற்ற வேண்டும்; நீர்பிடிப்பு பகுதிகளில் லட்சக்கணக்கான காட்டு மரக்கன்றுகளை நட்டு, குடகு மாவட்டத்தில் அதிக மழை பெய்ய தனி திட்டம் உருவாக்குதல்; சாக்கடை, ரசாயன கழிவு கலப்பதை தடுக்க அவசர சட்டம் உருவாக்குதல்; மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க கரைகளை பலப்படுத்தி தடுப்பணைகள் கட்டுதல்; கங்கையை துாய்மைப்படுத்திய மத்திய அரசு, காவிரியை துாய்மைப்படுத்தவும் நிதி ஒதுக்குதல்; நதிகளை தேசிய மயமாக்குதல்; முதல்கட்டமாக தென்னக நதிகளை காவிரியுடன் இணைத்தல் உள்ளிட்ட நோக்கங்களை வலியுறுத்தி யாத்திரை நடக்க உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.