விமானத்தில் பறந்த மயான ஊழியர்கள்
ஓமலுார்:சேலம் மயான பணியாளர்களை விமானத்தில் அழைத்து சென்றார் நடிகர் பெஞ்சமின். சேலம் மாநகரில் உள்ள மயானத்தில் பணிபுரிவோரின் மன இறுக்கத்தை போக்க, அவர்களை விமானத்தில் அழைத்து செல்ல, நடிகர் பெஞ்சமின் திட்டமிட்டார். அதற்கு, 'மாற்றம்' அறக்கட்டளை உறுப்பினரான, சென்னையை சேர்ந்த சிவில் இன்ஜினியர் சிவா, 27, என்பவரிடம், உதவி கோரினார். அவரும் உதவினார். நேற்று, சேலம் விமான நிலையத்தில் இருந்து, பெஞ்சமின் உட்பட, மயான பணியாளர்கள், 15 பேர், 'இண்டிகோ' விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டனர். சிவா கூறுகையில், ''சொந்த பணத்தால், ஏழை மக்களுக்கு முடிந்த உதவியை செய்து வருகிறேன். நடிகர் பெஞ்சமின் கேட்டுக்கொண்டதால், பணியாளர்களை விமானத்தில் அழைத்து செல்ல முடிவு செய்தோம். ''பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் சேலத்துக்கு அழைத்து வர உள்ளோம். இதன் மூலம் அவர்களது மன இறுக்கம், அழுத்தம் குறையும்,'' என்றார்.