மேம்பாலத்திற்கு ரூ.90 கோடி வழங்கிய முதல்வர் தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் இழுத்தடிப்பு
ஓசூர், ஓசூரில் மேம்பாலம் அமைக்க, 90 கோடி ரூபாயை தமிழக முதல்வர் ஒதுக்கிய நிலையில், தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தளி சாலையில் ரயில்வே கேட் உள்ளது. தினமும், 50,000 வாகனங்களுக்கு மேல் செல்கின்றன. தினமும், 30 முறைக்கு மேல் கேட் மூடப்படுவதால், ஓசூர் - தளி சாலையில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாக உள்ளது. ஓசூர் - தளி சாலை மட்டுமின்றி, அவ்வழியாக செல்லும் ரிங்ரோட்டிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஒருமுறை ரயில்வே கேட் அடைக்கப்பட்டு திறக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் சரியாக அரை மணி நேரத்திற்கு மேலாகி விடுகிறது.இதனால் சில ஆண்டுகளுக்கு முன், தலா ஒரு வாகனம் சென்று வரும் வகையில் மேம்பாலம் கட்ட வரைபடம் தயார் செய்யப்பட்டு, தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்திடமும் அனுமதி பெறப்பட்டது. பாலம் அமைப்பதற்காக, 4,134 சதுர மீட்டர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. 16 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒதுக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையும் பாலம் அமைக்க மண் பரிசோதனை செய்தது.ஆனால், ரயில்வே கேட் அமைந்துள்ள தளி சாலை, நெடுஞ்சாலைத்துறையால் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அதனால், தலா இரு வாகனங்கள் சென்று வரும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ரயில்வே கேட்டிற்கு மேல் வரும் மேம்பால பணியை மட்டும், தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் தான் மேற்கொள்ள வேண்டும். அதனால், நான்கு வழிச்சாலை மேம்பாலத்திற்கான அனுமதிக்காக மாநில நெடுஞ்சாலைத்துறை கடந்த, 2023 முதல், தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்புதல் கேட்டு வருகிறது.ஆனால், தளி ரயில்வே கேட்டை தற்போது இரு தண்டவாளங்கள் கடந்து செல்கின்றன. அவ்வழியாக நான்கு தண்டவாளங்கள் கடந்து செல்லும் வாய்ப்புள்ளது. அதனால், அதற்கு ஏற்றார்போல் பாலம் அமைக்க திட்டமிட்டு வரைபட அனுமதி வழங்குவதாக கூறி ரயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் கடந்த, 14ம் தேதி, தளி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க, 90 கோடி ஒதுக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், தென்மேற்கு ரயில்வே இன்னும் பாலத்திற்கான வரைபட அனுமதியை வழங்கவில்லை. தென்னக ரயில்வே என்றால், சென்னையில் உள்ள அலுவலகத்தில் பேசி, மாநில நெடுஞ்சாலைத்துறை விரைவில் அனுமதி பெற்று விடும். ஆனால், தென்மேற்கு ரயில்வே ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது.அதன் அலுவலகம், கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ளது. அங்கு சென்று நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) சார்பில் பலமுறை கடிதம் கொடுத்துள்ளது. நேரில் சந்தித்தும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதனால், மேம்பால பணி துவங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.