ரூ.100 கோடி மோசடி வழக்கு தம்பதி ஜாமின் மனு தள்ளுபடி
சேலம்:சேலம் அருகே அறக்கட்டளை நடத்தி, 100 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சேலம், அம்மாபேட்டையில், புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நடத்தி, 100 கோடி ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மூளையாக, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 54, மனைவி கரோலின் ஜான்சிராணி, 47, செயல்பட்டது தெரியவந்தது.சேலத்தில் மாறு வேடத்தில் உலா வந்த தம்பதியை மே, 3ல், சேலம் போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் சேர்ந்து, கைது எண்ணிக்கை, ஆறாக உயர்ந்தது.ஏற்கனவே, அறக்கட்டளை நிர்வாகி விஜயபானு, 48, கூட்டாளிகள் ஜெயபிரதா, 47, பாஸ்கர், 49, சையது முகமது, 44, ஆகியோர் கைதாகி, தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளனர்.இந்நிலையில் தம்பதி சார்பில், ஜாமின் கேட்டு, மே, 19ல், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று நடந்த விசாரணையில், போலீசார் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.