கிரிப்டோ கரன்சியில் முதலீடு எம்.எல்.எம்., முறையில் மோசடி
சேலம், பெரம்பலுார் மாவட்டம், பாடலுாரை சேர்ந்தவர் கோவிந்தராசு, 47, டிரைவர். இவர், நேற்று முன்தினம் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:கடந்த 2021ல், கோவையை சேர்ந்த கவுதம் சுரேஷ் என்பவர், யு.டி.எஸ்., எனும் கிரிப்டோ கரன்சியில் டிரேடிங் செய்தால், ஓராண்டில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும், வேறு நபர்களை சேர்த்தால் தனியே கமிஷன் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதை நம்பி, ரூ.18.48 லட்சம் பணம் கட்டி ஏமாந்தேன். இவ்வழக்கு, விசாரணையில் இருந்து வருகிறது.அப்போது அறிமுகம் ஆன சதீஸ் என்பவர், போனில் பேசும் போது, சேலத்தில் ஜூலை, 20ல், தனியார் ஹோட்டலில் கிரிப்டோ கரன்சி சம்பந்தமாக மீட்டிங் நடப்பதாக கூறினார். அது மோசடியாக இருக்கலாம் என கருதி அங்கு சென்றேன். அங்கு ஏற்கனவே, 400 பேருக்கு மேல் இருந்தனர். அங்கிருந்த, 6 பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும், 'க்ரோக்கர்' எனும் செயலில் பல நபர்களை சேர்த்தால், ரெபரல் போனஸ் பல லட்சங்களை பெற முடியும் எனவும் ஆசை காட்டி கொண்டிருந்தனர். ஏற்கனவே நான் ஏமாந்த யு.டி.எஸ்., செயலி மோசடியை போன்றே இருப்பதால், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார், ஹோட்டலுக்கு சென்று அங்கு மீட்டிங் நடத்தி கொண்டிருந்த ஜான் மார்க், ஹேமந்த், வெங்கடேஷ், செல்வராஜ், வீரன், கருப்பையா, பாஸ்கரன் ஆகியோரை விசாரித்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மீண்டும் நாளை அவர்களை விசாரிக்க, போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக, சம்மன் வழங்கப்பட்டுள்ளது.