உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தங்கத்தை அடுத்து வெளியேறிய வைரம்

தங்கத்தை அடுத்து வெளியேறிய வைரம்

சேலம்: நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியின், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கம் விலகிய நிலையில், நேற்று அக்கட்சியின் வீர தமிழர் முன்னணி, சேலம் மாவட்ட செயலாளர் வைரம் விலகி உள்ளார்.நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம், மேற்கு மண்டல செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகினர்.இவர்களை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார். விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோரும் அவர்களின் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கம் என்கிற தங்கதுரை, அக்கட்சியில் இருந்து விலகுவதாக தன் முகநுால் பக்கத்தில் நேற்று முன் தினம் பதிவு செய்தார். இதனிடையே நேற்று நாம் தமிழர் கட்சியின், வீர தமிழர் முன்னணியின், சேலம் மாவட்ட செயலாளர் வைரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். மேலும் தலைவரின் வழியில் தமிழ் தேசிய பாதையில் என்றும் பயணம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வைரம் கூறியதாவது: நான் நேசித்து வந்த கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் முழுமையாக விலகுகிறேன். கட்சி நிர்வாக வசதிக்காக பிரிக்கிறேன் என, ஒரு தொகுதியை ஒரு மாவட்டமாகவும், அதே போல ஒரு தொகுதியை, 40 முதல் 50 தொகுதிகளாகவும் பிரிக்க சொல்லி, இது வரை எந்த கட்சியிலும் இல்லாத வகையில் கட்சியின் கட்டமைப்பை சீர்குலைக்கும் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். சமீப காலமாக சீமான், எவ்வித காரணமும் இல்லாமல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார்கள் என, ஒரே மாதிரி காரணத்தை சொல்லி நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்துக் கொண்டிருந்தவர்களை வெளியேற்றுவது வாடிக்கையாகிவிட்டது.தவறுகள் செய்யாமல் எப்படி புறக்கணிப்பார், நீக்குவார் என, இவ்வளவு காலம் பொருத்து இருந்து பார்த்த போதுதான் தெரிகிறது, பிரச்சனை சீமானிடம் தான் உள்ளது என்று. உண்மையை உணர்ந்த பின் மீண்டும் என்னை நானே மாற்றிக்கொண்டு கட்சியில் இருப்பதை விட, விலகுவதே மேல் என முடிவு செய்தேன். இன்று (நேற்று) முதல் நாம் தமிழர் கட்சியிலிருந்தும், நான் வகித்து வரும் வீரத்தமிழர் முன்னணி மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன். இவ்வாறு கூறினார். சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சாமிநாதன்,மன்னார்குடி
நவ 20, 2024 16:24

அடுத்து வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம், அலுமினியம் எல்லாம் ஓடுவதற்கு ரெடியாக உள்ளன.


ராமகிருஷ்ணன்
நவ 20, 2024 09:52

நல்லது, நம்பி பிரோசனம் இல்லை என்று புரிந்து கொண்டனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை