ஒரே விலையில் நேரடி கொள்முதல்; மளிகை வியாபாரிகள் வலியுறுத்தல்
சேலம்: சேலம் மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க மகா சபை கூட்டம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.அதில் வணிக உரிமை கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வை ரத்து செய்தல்; வணிக நிறுவனங்களுக்கு குப்பை வரி உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெறுதல்; மின் கட்டண உயர்வை ரத்து செய்தல்; அனைத்து நிறுவனங்களும் தயாரிப்பு பொருட்களை, பெரிய நிறுவனங்களுக்கு மிக குறைந்த விலைக்கு விற்கின்றனர். உள்நாட்டிலுள்ள சிறு, குறு வியாபாரிகளுக்கு, பெரிய நிறுவனங்கள் விற்கும் விலையை விட, அதிக விலைக்கு கொடுப்பதால், சிறு வணிகர்கள் முழுமையாக நலிவடையும் அபாயம் உள்ளது. அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து வணிகர்களுக்கும், ஒரே விலையில் நேரடி கொள்முதல் செய்ய வழிவகுக்கும், புது நடைமுறையை ஏற்படுத்தி தருதல் என்பன உள்பட, 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் இளையபெருமாள், பொருளாளர் செல்வக்குமார், கவுரவ தலைவர் வர்க்கீஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.