பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதி பல்கலைகள் இடையே முரண்பாடு
பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதிபல்கலைகள் இடையே முரண்பாடுஓமலுார், நவ. 29--'மாநில பல்கலையில் உள்ள ஒரு பதவிக்கு, விண்ணப்பம் செய்வதற்கான அடிப்படை தகுதி, பல்கலைகள் இடையே வேறுபட்டிருப்பது முரண்பாடுடையது' என, கல்லுாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக பொதுச்செயலர் சுரேஷ் அறிக்கை: சேலம் பெரியார் பல்கலை, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், அஞ்சல் வழிக்கல்வி இயக்குனர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த, 26ல் வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க, இணை பேராசிரியர் பணி நிலைதான் அடிப்படை தகுதியாக, தமிழகத்தின் இதர மாநில பல்கலைகள் நிர்ணயித்துள்ளன. ஆனால் பெரியார் பல்கலை, பேராசிரியர் பணி நிலையில் உள்ளவர்கள் மட்டும், மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவித்துள்ளது.கல்லுாரி ஆசிரியர்களுக்கு, தற்போது பேராசிரியர் பணி மேம்பாடு வழங்கப்படாமல் உள்ளதால், அவர்கள், மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதை தவிர்க்கவே, பெரியார் பல்கலை இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநில பல்கலையில் உள்ள ஒரு பதவிக்கு, விண்ணப்பம் செய்வதற்கான அடிப்படை தகுதி, பல்கலைகள் இடையே வேறுபட்டிருப்பது முரண்பாடுடையது. இதனால் தமிழக அரசு தலையிட்டு, பெரியார் பல்கலையின் மேற்படி பதவிகளுக்கான அடிப்படை தகுதியாக, இணை பேராசிரியர் பணி நிலையை அறிவிக்க வேண்டும். மேலும், 2021 ஜன., 11 அன்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, 5ன் படி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என, தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.