தி.மு.க., - தலைவியை நீக்க வலியுறுத்தல்
கெங்கவல்லி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில், கடந்த, 27 முதல், நேற்று வரை தலா, 6 வார்டுகள் வீதம், சிறப்பு வார்டு கூட்டம் நடந்தது. நேற்று, 13 முதல், 18வது வார்டுகளுக்கு, கவுன்சிலர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது. அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து, தி.மு.க.,வை சேர்ந்த, துணைத்தலைவி சந்தியா உள்ளிட்ட, தி.மு.க., - காங்., கட்சி கவுன்சிலர்கள், 10 பேர், நேற்று செயல் அலுவலர் சோமசுந்தரத்திடம் மனு அளித்தனர். அதில், 'தி.மு.க.,வை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து தலைவி கவிதா. இவரது கணவர், 4வது வார்டு கவுன்சிலர் ராஜா. தலைவி இல்லாத நேரத்தில் அந்த அறையை, ராஜா முறைகேடாக பயன்படுத்தி, தலைவராக கூறி வருகிறார். தற்போதைய செயல் அலுவலர் மூலம் முன் அனுமதி பெயரில் பணி செய்து, முறைகேடு நடக்கிறது. தலைவியை பதவி நீக்க, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து தீர்மானமாக நிறைவேற்ற, சந்தியா வலியுறுத்தினார். இதனால் தீர்மான புத்தகத்தில், புகார் விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.