உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன் பரிசோதனையால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்

முன் பரிசோதனையால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்

ஓமலுார்: ''முன் பரிசோதனைகளால் மட்டுமே மார்பக புற்றுநோய் கட்டியா என கண்டறிந்து ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெற்று நிரந்தர தீர்வு காண முடியும்,'' என, சண்முகா மருத்துவமனை மருத்துவர் பிரபுசங்கர் தெரிவித்தார்.சேலம் சண்முகா மருத்துவமனை சார்பில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ கருத்தரங்கு, கருப்பூரில் உள்ள பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. அதில் சண்முகா மருத்துவமனை முதன்மை அதிகாரி பிரபுசங்கர் பேசியதாவது:நவீன மருத்துவ உலகில் தற்போது மார்பக புற்றுநோய் பாதிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டு முறையான பரிசோதனையின்றி இந்தியாவில் ஆண்டுதோறும், 4 லட்சம் பெண்களுக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது. அமெரிக்காவில் ஆண்டுக்கு, 40,000 பெண்கள் உயிரிழக்கின்றனர். ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது போன்று பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பொருளாதாரத்தில் வறுமை, முன்கூட்டியே பரிசோதனை செய்யாமை, தெரிந்தபின் முறையான சிகிச்சை இல்லாதது ஆகியவையே.பெண்களுக்கு, 'ஈஸ்ட்ரோஜன்' செல் அதிக உற்பத்தி காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. ஆண்களுக்கு இந்நோய் பாதிப்பு எற்படும் என்றாலும் மிகக்குறைவு. 5 சதவீதம் பரம்பரை நோயாக இருந்தாலும், 95 சதவீதம் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய முடியாது. தற்போது இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமும் சுய பரிசோதனை மூலமும் பெண்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். முன்கூட்டிய பரிசோதனைகளால் மட்டுமே மார்பக கட்டிகளை கண்டறிந்து அது சாதாரணமானதா, புற்றுநோய் கட்டியா என அதற்கேற்ப ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெற்றுவிட்டால் நிரந்தர தீர்வு காண முடியும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இந்நோயின் அறிகுறி தென்படும். அதில் திருமணமாகாத பெண்கள், தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் செல் அதிகரிப்பால், அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. திருமணமான பெண்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றத்தால், ஈஸ்ட்ரோஜன் செல் உற்பத்தி குறையும் என்பதால் மார்பக புற்றுநோய் பாதிப்பு மிக குறைவு. உடற்பயிற்சியாலும் நோய் பாதிப்பில் இருந்து தவிர்க்க முடியும். வலி இல்லாத கட்டி என தெரியவந்தாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும். மார்பகத்தில் தோல் பாதிப்பு, கட்டியால் தோற்றத்தின் அளவு மாற்றம், நெறிகட்டுதல் ஆகிய அறிகுறிகள் தென்படும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முதல் இரு காலகட்டங்களில் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டால் எளிதில் குணமடையலாம். 3ம் கட்டத்தில் கட்டுப்படுத்தவும், 4ம் கட்டத்தில் மார்பகத்தை அகற்ற வேண்டிய சூழலும் ஏற்படும். மேமோகிராம், ஹீமோதெரபி உள்பட, 5 வகை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்நோய் சிகிச்சையை, அரசு காப்பீடு திட்டத்தில் கொண்டுவந்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து பயோ டெக்னாலஜி, மைக்ரோ பையாலஜி மாணவியர், ஆசிரியைகளின் கேள்வி, சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இதில் கல்லுாரி முதல்வர் ஹரிகிருஷ்ணராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வுக்கு, 'காலைக்கதிர்' மீடியா பாட்னராக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ