உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அளவுக்கு அதிகமாக கிரானைட் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

அளவுக்கு அதிகமாக கிரானைட் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே அளவுக்கு அதிகமாக கிரானைட் கற்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை, பொதுமக்கள் சிறை பிடித்தனர். பிடிபட்ட லாரி, சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.இடைப்பாடி அருகே உள்ள மலங்காடு, புட்டமனை, வீரப்பம்பாளையம், தங்காயூர் ஆகிய பகுதிகளில், ஏராளமான 'பெல்ஸ்பெர்' எனப்படும் உயர்ரக கற்களை கொண்ட குவாரிகள் உள்ளது. குறிப்பாக, தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில், 10க்கும் மேற்பட்ட கிரானைட் கற்குவாரிகள் உள்ளது.இந்த குவாரியில், 10 டன் முதல், 50 டன் வரை ஒரே கல்லாக வெட்டியெடுத்து டாரஸ் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்த கிரானைட் கற்கள் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி செல்லும்போது, ரோடுகள் பழுதடைவதோடு, ரோட்டின் அடிப்பாகத்தில் உள்ள குடிநீர் குழாய் பைப்புகள் அடிக்கடி உடைந்து விடுகிறது.அதனால், மலங்காடு, புட்டமனை, செட்டிக்காடு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள், லாரி டிரைவர்களிடமும், கல்குவாரி அதிபர்களிடமும் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், நேற்று காலை அதிக எடை கொண்ட இரண்டு பெரிய கிரானைட் கற்களை ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று வந்தது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், டாரஸ் லாரியை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின், இதுகுறித்து சங்ககிரி தாசில்தார் கல்பனாவிடம், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பின், அந்த டாரஸ் லாரி சங்ககிரி தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.ஓவர் லோடுடன் சென்றதாக பொதுமக்கள் பிடித்து கொடுத்த டாரஸ் லாரி, சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.நடப்பாண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புமேட்டூர்: நடப்பாண்டில் காவிரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர்வர வாய்ப்புள்ளதால், பல ஆண்டுக்கு பின், மேட்டூர் அணை வலதுகரையில் உபரி நீர் வெளியேற்ற கட்டப்பட்ட மண் அணை பகுதி, போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படுகிறது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.470 டி.எம்.சி., அணை அடிவாரத்தில் மேட்டூர் நகரம் உள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் வரும் உபரி நீரை வெளியேற்ற மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில், இடதுகரை பகுதியில் உள்ள, 16 கண் மதகு உபரி நீர் போக்கி மூலம் விநாடிக்கு, 3.57 லட்சம் கனஅடி நீரை வெளியேற்ற முடியும். அதை விட கூடுதலாக நீர்வரும் பட்சத்தில், அணையை பாதுகாக்க, வலதுகரை பகுதியில், 40 ஆயிரம் கனஅடி உபரி நீரை வெளியேற்றும் வகையில் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணை, 16 கண் மதகு வழியாக வெளியேற்றும், 3.57 லட்சம் கனஅடி நீரை விட கூடுதல் நீர் அணைக்கு வரும் பட்சத்தில், அதை வெளியேற்ற வலதுகரை பகுதியில் கட்டப்பட்டுள்ள மண் அணை உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படும். அந்த தண்ணீர் வெளியேறும் பகுதி முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தது.காலப்போக்கில் வலதுகரையில் உபரி நீர் வெளியேறும் பகுதியை பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி கொண்டனர். அதனால், மண் அணையை உடைக்கும் பட்சத்தில் தண்ணீர் குடியிருப்புகளில் பாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. 2005ல் மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக விநாடிக்கு, 2.42 லட்சம் கனஅடி நீர்வந்தது.அப்போது மண் அணையை உடைக்க போவதாக பரவிய வதந்தியால் பொதுமக்கள் கலக்கம் அடைந்தனர். எனினும், அணை நீர்வரத்து குறைந்ததால் மண் அணை உடைக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக மண் அணை பகுதியை சுற்றிலும் கருவேலமரங்கள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தது.திடீரென இரு நாட்களாக மண் அணை பகுதியில் உள்ள மரம், புதர்களை அகற்றி பாராமரிப்பு செய்யும் பணியை பொதுப்பணித்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். கடந்த இருநாட்களாக போர்க்கால அடிப்படையில் மண் அணை பகுதியில் பராமரிப்பு பணி நடக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மேட்டூர் அணைக்கு, 1961ல் அதிகபட்சமாக, 3 லட்சத்து, ஆயிரத்து, 52 கனஅடி நீர்வந்தது. பின், 2005ல் அதிகபட்சம், 2 லட்சத்து, 41 ஆயிரத்து, 300 கனஅடி நீர்வந்தது. பருவமழை காலத்தில் காவிரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக எத்தனை லட்சம் கனஅடி நீர் வரும் என்பதை துல்லியாக கூறி முடியாது.நடப்பாண்டில் அணைக்கு அதிகபட்ச நீர்வரத்து கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வலதுகரை பகுதியில் புதர்மண்டி கிடந்த மண் அணை பகுதியை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி செய்கிறோம். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.நடப்பாண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி பொதுப்பணித்துறையினர் பல ஆண்டுகளுக்கு பின் வலதுகரை பகுதியில் உள்ள மண் அணை சுற்றுப்பகுதியை சீரமைப்பது நீர்வழிபாதையில் வீடுகட்டி குடியிருக்கும் மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை