போலீஸ் கணவனால் சீரழிந்த குடும்பம் குழந்தைகளுடன் தாய் தற்கொலை
சேலம்:சேலம், கொண்டலாம்பட்டி போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் கோவிந்தராஜ், 38; சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார். இவரது மனைவி சங்கீதா, 32, மகன் ரோகித், 8, மகள் தர்ஷிகாஸ்ரீ, 4, ஆகியோர், கடந்த, 17ம் தேதி வீட்டில் இறந்து கிடந்தனர். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது:சங்கீதா, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தற்கொலை செய்து கொண்டார். கோவிந்தராஜூக்கு வேறு ஒரு பெண் போலீசுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை, அவரது மொபைல் போனை பார்த்து, சங்கீதா கண்டுபிடித்துள்ளார். இதனால், தம்பதி இடையே இரு மாதங்களாக தகராறு இருந்தது. தற்போது, கோவிந்தராஜிடம் இருந்து அவரது மொபைல் போன் விசாரணைக்கு வாங்கப்பட்டுள்ளது.அதில், அவர் பேசியதற்கான ஆதாரங்களை எடுக்கவும், சில தகவல்களை பெறவும், சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு மொபைல் போன் அனுப்பப்படும். அதன்படி, அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, துறை ரீதியான நடவடிக்கைக்கும் வாய்ப்புள்ளது.வழக்கமாக, குழந்தைகள் இறந்து, மனைவி தற்கொலை செய்து கொண்டால், தற்கொலைக்கு துாண்டியதாக கணவர் மீது வழக்கு பதியப்படும். இந்த வழக்கில் அப்படி செய்யப்படவில்லை. அதற்கு காரணம், சங்கீதாவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் அப்படி இல்லை.தற்கொலைக்கு கணவர் தான் காரணம் என, கடிதம் எழுதி வைக்கவும் இல்லை. மொபைலில் கிடைக்கும் ஆதாரப்படி, வழக்கு மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.போலீஸ் என்பதால், கோவிந்தராஜை காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கோவிந்தராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.