எஸ்.எஸ்.ஐ.,யை கடித்து ரகளை தந்தை, மகளுக்கு காப்பு
'ஆத்துார், ஆத்துார், களரம்பட்டியை சேர்ந்தவர் நிவேதா, 21. இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். வீட்டுக்கு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக, நிவேதா, மாமியார் லட்சுமி, 50, இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமியார், வீட்டின் ப்யூஸ் கேரியரை பிடுங்கியுள்ளார். நிவேதா, வீட்டின் கதவை, குழவி கல்லால் உடைத்து சேதப்படுத்தினார்.இதுகுறித்து லட்சுமி, மல்லியக்கரை போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, எஸ்.எஸ்.ஐ., கண்ணதாசன், 53, விசாரணைக்கு வரும்படி, நிவேதாவை அழைத்தார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, ஸ்டேஷனுக்கு வந்த நிவேதா, கண்ணதாசனிடம் வாக்குவாதம் செய்து அவரது சட்டையை பிடித்து இழுத்துள்ளார். தாக்கியதாகவும் புகார் எழுந்தது. பின் அவர் அணிந்திருந்த செருப்பை எடுத்து, எஸ்.எஸ்.ஐ., மீது வீசியுள்ளார். அவர் நகர்ந்து கொண்டார்.இதனால் மற்றொரு எஸ்.எஸ்.ஐ., செல்வராஜ், அந்த பெண்ணிடம் கேட்டார். அப்போது நிவேதாவின் தந்தை பரமசிவம், 50, செல்வராஜின் தோள் பட்டையை கடித்துள்ளார். அவர் காயம் அடைந்து, மல்லியக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், உமையாள்புரத்தை சேர்ந்த பரமசிவம், 50, நிவேதா, 21, ஆகியோரை கைது செய்தனர்.