பி.டி.ஓ.,வுக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம்
சங்ககிரி, சுதந்திர தினத்தை ஒட்டி, மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.தாழையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை துணை கலெக்டர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். அதில் மகுடஞ்சாவடி பி.டி.ஓ., ஒன்றிய பொறியாளர், வட்டார உதவி செயற்பொறியாளருக்கு எதிராக, மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது:மாங்குட்டப்பட்டியில் பெரிய ஏரி, சின்ன ஏரி உள்ளன. இரு ஏரிகளும், காவிரி ஆற்றின், 100 ஏரி திட்டத்தில் உள்ளது. பெரிய ஏரி நிரம்பி, சின்ன ஏரிக்கு தண்ணீர் செல்லும்போது, கன்னந்தேரியில் இருந்து மூலக்கடை செல்லும் வழியில் உள்ள தார்ச்சாலை, 250 அடி துாரத்துக்கு மூழ்கி விடுகிறது. போக்குவரத்தும் தடைபடுவதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மக்களின் அவதி குறித்து, மகுடஞ்சாவடி பி.டி.ஓ., ஒன்றிய பொறியாளர், வட்டார உதவி செயற்பொறியாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அவர்களுக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனியாவது ஏரி நீர் வரும் தார்ச்சாலையில் சிறு மேம்பாலம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.17ம் முறை தீர்மானம்கெங்கவல்லி, மண்மலை ஊராட்சி, மொடக்குப்பட்டியில், ஒன்றிய அலுவலர் ராஜ்கண்ணு தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் மொடக்குப்பட்டியில் அரசு விதிமீறி கட்டப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி ஆலையை அகற்ற, நேற்றுடன், 17ம் முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.'போதை பொருள் அதிகம்'கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடந்த கூட்டத்தில், சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., பொதுச்செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட மக்கள், போதை பொருள் புழக்கம் அதிகளவில் உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு ஊராட்சி செயலர் விவோகனந்தன், 'அடிக்கடி போலீசார், ரெய்டு நடத்தி, போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்' என்றார்.மயானம் ஆக்கிரமிப்புநாழிக்கல்பட்டியில், மயானம் அருகே உள்ள விவசாய நிலங்கள், வீட்டுமனைப்பிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மயான நிலத்தை ஆக்கிரமித்து, மனைப்பிரிவுகள் விற்கப்படுகிறது. அதனால் மயான நிலங்களை அளவீடு செய்து, எல்லை கல் நட்டு பராமரிக்க கிராம சபாவில் மனு அளித்ததாக, நாழிக்கல்பட்டி விவசாயி செல்வராசு உள்ளிட்டோர் கூறினர்.ஜாதிவாரி கணக்கெடுப்புஅயோத்தியாப்பட்டணம் அடுத்த உடையாப்பட்டியில் நடந்த கூட்டத்தில், பா.ம.க., மாநில மாணவர் சங்க தலைவர் விஜயராசா தலைமையில் மக்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்ற மனு வழங்கினர். அதேபோல் துக்கியாம்பாளையம் கூட்டத்தில், பா.ம.க., வாழப்பாடி கிழக்கு ஒன்றிய செயலர் முருகன் தலைமையில் பலர், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மனு கொடுத்தனர்.அத்திப்பட்டி நிலம்தீர்மானத்துக்கு மறுப்புசேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியை உருவாக்க, கோவிந்தவாடி, காளியூர், அத்திப்பட்டி, சூரியூர் உள்ளிட்ட கிராமங்கள் காலி செய்யப்பட்டன. தற்போது ஏரி வறண்டு புதர்மண்டியுள்ள அத்திப்பட்டி, சூரியூர் பகுதியில் உள்ள நிலத்தில், விவசாயம் செய்ய, விவசாயிகள் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் குரால்நத்தம் கிராம சபா கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாவட்ட குழு ஜீவா உள்ளிட்ட விவசாயிகள், 'அத்திப்பட்டி, சூரியூர் நிலத்தை விவசாயம் செய்வதற்கு வழங்கலாம்' என, தீர்மானம் நிறைவேற்றி தரும்படி கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு ஊராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டது.