உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நுகர்வு அதிகரிப்பு எதிரொலி காபி கொட்டை விலை கிலோவுக்கு ரூ.65 உயர்வு

நுகர்வு அதிகரிப்பு எதிரொலி காபி கொட்டை விலை கிலோவுக்கு ரூ.65 உயர்வு

சேலம்: நுகர்வு அதிகரிப்பால் ஒரே மாதத்தில் காபி கொட்டை விலை கிலோவுக்கு, 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதற்கேற்ப காபித்துாள் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் ஆண்டுக்கு, 3.50 லட்சம் டன் காபி கொட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனாலும் காபி நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 'காபி கபே' கலாசாரம், இளைஞர்களிடம் அதிகரிப்பதால், காபியின் தேவை பல மடங்கு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், 'ஸ்டார்பக்ஸ்' உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள், இன்று சிறு நகரங்களில் கூட கிளைகளை தொடங்கி வருகின்றன. இதற்கேற்ப காபி கொட்டை விலை ஒரே மாதத்தில், 65 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. இதனால் காபி துாள் விலை அதிகரிக்கும் என, இந்தியன் காபி டிரேட் அசோசியேஷன் அறிவித்துள்ளது.இதுகுறித்து சேலம் லட்சுமி காபி நிறுவன நிர்வாக இயக்குனர் ராகவன் கூறியதாவது:காபி பயிரை பொறுத்தவரை, பருவம் தவறாத சூழல் அவசியம். பூ பூக்கும் பருவத்தில் மழை பெய்தால் உற்பத்தி பாதிக்கப்படும். பருவம் தவறி பெய்யும் மழையால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக காபி உற்பத்தி கடும் பாதிப்பை சந்திக்கிறது. இதனால் இரு ஆண்டுகளாக காபியின் விலை அதிகரித்து வருகிறது.வழக்கமாக ஜூனில், பிரேசிலில் அறுவடை தொடங்கினால் விலை குறையும். ஆனால் நடப்பாண்டில் விலையில் சரிவு ஏற்படவில்லை. தற்போது கிலோ, 485 ரூபாய்க்கு விற்கப்படும் அராபிகாவின் விலை, விரைவில், 500 ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 65 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.அதேபோல் சில மாதங்களுக்கு முன் கிலோ, 420 ரூபாய் என உச்சத்தை தொட்ட ரொபாஸ்டாவின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் இல்லை. இதனால் தற்போது, 680 ரூபாய்க்கு விற்கப்படும் காபித்துாள், 780 ரூபாய் வரை உயரக்கூடும். இந்தியாவில் டிசம்பரில் அறுவடை தொடங்கும். ஆனாலும், சர்வதேச சந்தையில் பற்றாக்குறை இருக்கும்போது பெரும்பாலான காபி கொட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இந்தியாவில் காபி கொட்டை விளைச்சல் நன்றாக இருந்தாலும் விலையில் பெரிய மாற்றம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.உலக அளவில் பாதிப்பால்காபி உற்பத்தி கேள்விக்குறிசர்வதேச அளவில் காபி உற்பத்தியில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக, 26 லட்சம் டன் காபி கொட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு பெரும்பாலும், 'அராபிகா' வகை பயிரிடப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் பனிப்பொழிவால் பிரேசிலில் உள்ள, 20 சதவீத காபி தோட்ட பயிர்கள் அழிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட உற்பத்தி, இதுவரை மீண்டபாடில்லை. இதன் எதிரொலியாக, 285 ரூபாயாக இருந்த அராபிகா காபி கொட்டை விலை, 420 ரூபாயை தாண்டியது. அதேபோல் உற்பத்தியில், 2ம் இடத்தில் உள்ள வியட்நாமில், 15 லட்சம் டன் காபி கொட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அங்கு, 'ரொபாஸ்டா' வகை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அங்கு மழை, பனிப்பொழிவு உள்ளிட்டவற்றால் காபி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ரொபாஸ்டா கிலோ, 136 ரூபாயாக இருந்த நிலை மாறி, 420 ரூபாயாக உயர்ந்தது. பருவ நிலையால் காபி பயிருக்கு ஏற்படும் பாதிப்பால் ஏராளமான விவசாயிகள் துரியன் பழம் பயிரிட தொடங்கியுள்ளனர். மேலும் காபியை விட பல மடங்கு லாபம் தருவதால் பல காபி தோட்டங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் காபி உற்பத்தி அதிகரிக்கும் என்பது கேள்விக்குறியே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !