கிராவல் மண் கடத்தல் அதிகரிப்பு; மாயமாகும் பெருமாள் மலை
கெங்கவல்லி : நாகியம்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில், 30 அடி ஆழத்துக்கு மேல் கிராவல் மண் கடத்தப்பட்டுள்ளதால், மலை மாயமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், உரிய அனுமதியை மீறி கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. நுாற்றுக்கணக்கான போலி ரசீதுகள் மூலமாக, அன்றாடம் மண் திருட்டு நடக்கிறது. குறைந்த இடங்களில் நடந்து வந்த மண் திருட்டு, தற்போது சிறிய மலைக்குன்று, ஆள் நடமாட்டம் இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில், நள்ளிரவில் மண் கடத்தல் அதிகரித்து வருகிறது.அதன்படி கெங்கவல்லி அருகே, நாகியம்பட்டி மற்றும் கோனேரிப்பட்டி எல்லை பகுதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் மலை அடிவாரத்தில், ஏரி, அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. மலை அடிவார பகுதியில், சில மாதங்களாக ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு மேல் இருந்த இடத்தில் மரங்களை அகற்றி, அங்கு குவாரி போன்று அனுமதியின்றி மண் கடத்தி வருகின்றனர்.இரவு நேரத்தில், பொக்லைன் உதவியுடன் டிப்பர் லாரிகளில் மண் கடத்துகின்றனர். தற்போது பெருமாள் மலை அடிவாரத்தில், 30 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், பெருமாள் மலையே மாயமாகும் நிலை ஏற்படும்.இதுகுறித்து, கோனேரிப்பட்டி விவசாயி அந்தோணி ெஹன்றி கூறுகையில்,'' பெருமாள் மலை அடிவாரத்தில் இரவு நேரத்தில் கிராவல் மண், மரங்கள், கற்கள் கடத்தும் வேளையில் சிலர் ஈடுபடுகின்றனர். 30 அடி ஆழத்துக்கு மேல் பள்ளமாக உள்ளதால், அருகில் உள்ள ஏரி, பெருமாள் மலை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இவற்றை தட்டிக்கேட்ட என்னை உள்பட சில விவசாயிகளை, வாகனம் ஏற்றி கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. கடந்த, 16ல், சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம், மண் கடத்தல் குறித்து புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. கிராவல் மண் கடத்தும் கும்பல் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இது குறித்து கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''நாகியம்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில், அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியது தொடர்பான புகார் குறித்து நேரில் ஆய்வு செய்து, கனிம வளத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் மூலம் கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். கிராவல் மண் கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.