ஜல்லிக்கட்டு விழாவுக்கு கூலமேடு தயார்; 350 காளை உரிமையாளர், 300 வீரர் பதிவு
ஆத்துார்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கூலமேட்டில் வரும், 17ல் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வாடிவாசல், காளை வழிப்பாதை, மருத்துவ முகாம் பகுதி, மக்கள் பார்வையிடம் உள்ளிட்ட இடங்களில், 'பேரிகார்டுகள்' அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியை, ஆத்துார் தாசில்தார் பாலாஜி தலைமையில் வருவாய்த்துறையினர், நேற்று ஆய்வு செய்தனர். விழா ஏற்பாடு, பாதுகாப்பு பணி குறித்து கேட்டறிந்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. கூலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள், வீரர்கள் தங்களை பதிவு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. ஆன்லைன் மட்டுமின்றி, ஆப்லைன் மூலம் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. நேற்று வரை, உள்ளூர், அதன் சுற்றுப்பகுதிகள், பல்வேறு மாவட்டங்கள் என, 350 காளைகளின் உரிமையாளர்கள், 300 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளதாக, விழாக்குழுவினர் தெரிவித்தனர்.