வெடித்த டயரை மாற்றும்போது பைக் மோதி லாரி டிரைவர் பலி
ஓமலுார், தர்மபுரி, நல்லம்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன், 53. லாரி டிரைவர். இவருக்கு மனைவி வள்ளி, 42, இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 7:40 மணிக்கு, சேலம் மாவட்டம் மல்லுாரில், கோழி தீவனத்தை லாரியில் எடுத்துக்கொண்டு, லட்சுமிகாந்தன் கர்நாடகா புறப்பட்டார். அவருடன் கிளீனர் கருணாகரன் இருந்தார்.ஓமலுார் ஆர்.சி.செட்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை பாலம், சர்வீஸ் சாலையில் வந்தபோது, லாரியின் பின்புற டயர் வெடித்தது. அவற்றை மாற்றிக்கொண்டிருந்தபோது, அதே திசையில் தர்மபுரி நோக்கி, 'ஸ்போர்ட்ஸ்' பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர், அதிவேகமாக வந்து, லட்சுமிகாந்தன், கருணாகரன் மீது மோதியுள்ளார்.இருவரும் படுகாயம் அடைந்து ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமிகாந்தன், நேற்று உயிரிழந்தார். ஓமலுார் போலீசார், பைக்கை விட்டு தப்பி ஓடியவர் குறித்து விசாரிக்கின்றனர்.