கடன் கட்டியதற்கு கமிஷன் கேட்டு தொழிலாளியை தாக்கியவர் கைது
மேட்டூர், மேட்டூர், ஆண்டிக்கரை, புதுக்காட்டையனுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி பிரபு, 30. இவரது மனைவி ரூபிணி, 28. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ரூபிணியின் தந்தை தங்கராஜ், இரு ஆண்டுக்கு முன்பு, 2.70 லட்சம் ரூபாய் கடனாக, பிரபுவிடம் வாங்கியுள்ளார். கடந்த, 23 மதியம், தங்கராஜ், மகள் ரூபிணியிடம் மொபைல் போனில் பேசியுள்ளார். அப்போது, 'கடன் தொகையை திரும்ப தருகிறேன். குஞ்சாண்டியூர் பஸ் ஸ்டாப்புக்கு வாங்க' என கூறியுள்ளார். அங்கு சென்ற பிரபு, ரூபிணியிடம், கடன் தொகையை தங்கராஜ் கொடுத்தார். பின் தம்பதியர், பைக்கில் வீட்டுக்கு புறப்பட முயன்றனர். அப்போது அங்கு வந்த திப்பம்பட்டியை சேர்ந்த தேவராஜ், 42, என்பவர், 'என்னால்தான் தங்கராஜ் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்தார். அதற்கு கமிஷன், 50,000 ரூபாய் தர வேண்டும்' என, பிரபுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுத்தார். ஆத்திரம் அடைந்த தேவராஜ், அவரது கையில் போட்டுள்ள வளையத்தால், பிரபுவின் முகம், முதுகு, தோள்பட்டையில் தாக்கியுள்ளார். காயம் அடைந்த பிரபு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் நேற்று, தேவராஜை கைது செய்தனர்.