இரும்பாலையை லாபகரமாக மாற்றுவதே நோக்கம் அமைச்சர் குமாரசாமி தகவல்
சேலம், ''இருபது ஆண்டுக்கு முன் லாபகரமாக இயங்கிய ஆலையில், தற்போது லாபம் குறைந்துள்ளது. மீண்டும் லாபகரமாக மாற்றுவதே நோக்கம்,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.சர்வதேச யோகா தினத்தையொட்டி, சேலம், இரும்பாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சிறப்பு யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மத்திய கனரக தொழில் மற்றும் எஃகு துறை அமைச்சர் குமாரசாமி, பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன், இரும்பாலை நிர்வாக இயக்குனர் பிரபீர்குமார் சர்க்கார் உள்ளிட்ட இரும்பாலை ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பயிற்சி செய்தனர்.தொடர்ந்து குமாரசாமி கூறியதாவது:இரும்பாலையை தொழில் ரீதியாக சந்தைப்படுத்த, மேம்பாட்டு பணி தொடங்கி நடந்து வருகிறது. 20 ஆண்டுக்கு முன் லாபகரமாக இயங்கிய ஆலையில், தற்போது லாபம் குறைந்துள்ளது. மீண்டும் லாபகரமாக மாற்றுவதே நோக்கம். இதற்கு ஆலையில் பல்வேறு புது பொருட்கள் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்கும் திட்டம் ஆலோசனையில் உள்ளது. இதுகுறித்து முறையான அறிவிப்பு, 4, 5 மாதங்களில் வெளியிடப்படும்.எதிர்க்கட்சிகள் கூறுவதை போன்று நாட்டில், பா.ஜ., ஒருபோதும் பிரிவினையை ஏற்படுத்தியதில்லை. மாறாக, ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறது. சில மாநில கட்சிகள் தான், பா.ஜ., மீது விமர்சனங்களை வைக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடகாவில், நடிகர் கமலின், 'தக் லைப்' படம் வெளியிடுவதில் சிக்கல் குறித்து நிருபர்கள் கேட்டபோது, ''ஒரு சினிமா. அப்படி மட்டும் தான் பார்க்க முடியும். அதை பற்றி கவலைப்பட ஒன்றும் இல்லை,'' என, குமாரசாமி தெரிவித்தார்.