முருங்கை விளைச்சல் அதிகரிப்பு கிலோ 10 ரூபாயாக குறைந்தது
தலைவாசல், தலைவாசல், தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சேலம் மாவட்டம், ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் சின்னசேலம் சுற்று வட்டார பகுதிகளில், காய்கறி, கீரைகளில் ஊடுபயிராக முருங்கை நடவு செய்துள்ளனர். வீடு, தோட்டங்களிலும் முருங்கை மரம் வளர்த்து வருகின்றனர். ஜூலை மாதத்தில் பெய்த மழைக்கு பின், முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. தோட்டம், வீடுகளில் உள்ள நாட்டு ரக முருங்கை மரங்களில், கொத்து, கொத்தாக காய்கள் காய்த்துள்ளன.இதனால், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு, நாட்டு ரகம் உள்ளிட்ட முருங்கைக்காய் வரத்து அதிகளவில் உள்ளது. சில தினங்களாக முருங்கைக்காய் கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து, முருங்கை விவசாயி சீனிவாசன் கூறுகையில்,''கடந்த மாதம் ஒரு கிலோ முருங்கைக்காய், 100 முதல், 120 ரூபாய் வரை விற்றது. ஜூலை மாதம் பெய்த மழையால், முருங்கையில் பூக்கள் பூத்து காய் வரத்து அதிகரிக்க . தற்போது கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்காத நிலை உள்ளது. இம்மாதம், முகூர்த்த நாளுக்கு பின் தான், முருங்கை தேவையும் அதிகரித்து, விலை சற்று உயரும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.