ஊர் வழிகாட்டி பலகைகள் இல்லை வெளியூர் வாகன ஓட்டிகள் தவிப்பு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள், களரம்பட்டி, பெரமனுார், மல்லுார் வழியே, சேலம் - திருச்சி நெடுஞ்சாலையை சென்றடைகின்றனர். பெரமனுார் மயானம் அருகே, 3 சாலைகள் சந்திக்கின்றன. அங்கு எந்த சாலை, எந்த ஊர் செல்கிறது என, ஊர் வழி காட்டி பலகை இல்லை.இதுகுறித்து பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதய குழும முன்னாள் தலைவர் கவுதம் கூறியதாவது:ஊர் வழிகாட்டி பலகை இல்லாததால், வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். பனமரத்துப்பட்டியில் இருந்து மல்லுார் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள், பெரமனுார், சிங்காரத்தோப்பு வழியே சுற்றியபடி செல்கின்றனர். சந்தியூர், பாரப்பட்டி, அம்மாபாளையம் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள், மல்லுார் சுற்றியபடி செல்கின்றனர்.நாமக்கல், ராசிபுரம், மல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பனமரத்துப்பட்டி வரும் வெளியூர் மக்கள், 3 சாலை சந்திக்கும் இடத்தில், எப்படி செல்வது என தெரியாமல் தவிக்கின்றனர். அவசரத்துக்கு செல்ல முடியாமல், வழிமாறி சென்று அவதிப்படுகின்றனர். அங்குள்ள மூன்று சாலையிலும், மல்லுார், சந்தியூர் பனமரத்துப்பட்டி ஆகிய இடங்களுக்கு செல்லும் ஊர் வழிகாட்டி பலகைகள் வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.