எந்த பிரச்னையாக இருந்தாலும் மகளிர்துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும்
ஓமலுார்:ஓமலுார், சிக்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 'மனநல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு' நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். உறுப்பினர்களுக்கு அன்றாடம் நடக்கும் பல்வேறு நிகழ்வால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் நாம் எடுக்கும் முடிவுகளில் தடுமாற்றம், பசியின்மை, துாக்கமின்மை, தவறான முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஏற்படுகின்றன. மகளிர் பணிபுரியும் இடத்தில் ஏற்படும் பிரச்னையாக இருந்தாலும், குடும்ப பிரச்னையாக இருந்தாலும், தொழில் உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும், அதை துணிச்சலோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அச்சம் இல்லாமல், எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முரளி, மனநல மருத்துவ திட்ட அலுவலர் விவேகானந்தன், சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.