சத்துணவு மைய பணிக்கு 33 பேரிடம் நேர்காணல் 2 இடங்களில் தகுதியான விண்ணப்பம் வரவில்லை
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 63 சத்துணவு மையங்கள் உள்ளன. அதில், 21 சமையல் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. முதல் கட்டமாக, 11 பள்ளிகளில், சமையல் உதவியாளர் பணிக்குரிய நேர்முகத்தேர்வை, பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், கமிஷனர் கார்த்திகேயன், சேலம் தெற்கு தாசில்தார் ஸ்ரீதரன், நேற்று நடத்தினர். 11 பணியிடங்களுக்கு, 37 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 4 பேர் வரவில்லை. 33 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடந்தது.இதில் அரசமரத்து காட்டூர் அரசு பள்ளி சமையல் உதவியாளர் பணியிடம், ஆதிதிராவிடர் பிரிவில் விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாழக்குட்டப்பட்டி அரசு பள்ளி சமையல் உதவியாளர் பணியிடம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இரு பணியிடத்துக்கும் தகுதியான விண்ணப்பங்கள் வரவில்லை. இதனால், 9 பள்ளிகளின் சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு மட்டும் தேர்முகத்தேர்வு நடந்தது.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'இரு இடங்களும் காலி பணியிடமாக அறிவிக்கப்படும். தகுதியானவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்' என்றனர்.