உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒடிசா சிறுமி கொலை வழக்கை பெங்களூருக்கு மாற்ற நடவடிக்கை

ஒடிசா சிறுமி கொலை வழக்கை பெங்களூருக்கு மாற்ற நடவடிக்கை

சேலம்: ஒடிசா சிறுமி கொலை வழக்கை பெங்களூருக்கு மாற்ற, சேலம் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதுகுறித்து சேலம் எஸ்.பி., அலுவலக அறிக்கை:சங்ககிரி அருகே வைகுந்தத்தில் கடந்த செப்., 30ல், சூட்கேசில் பெண் சடலம் இருந்தது. சங்ககிரி போலீசார் விசாரணையில் துப்பு கிடைக்காத நிலையில், அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக சடலம் கண்டெடுக்கப்பட்ட நாளுக்கு முன், 4 நாட்களாக சென்ற வாகனங்களில், சம்பவ இடம் அருகே நின்று செல்வதை வைத்து, 114 வாகன விபரங்களை பெற்று விசாரணை நடந்தது. இதில் கிடைத்த குறிப்பிட்ட மொபைல் எண்ணை தொடர்பு கண்டு விசாரித்தபோது, அபினாஷ் சாகு என்பவர் அளித்த தகவல் திருப்தி அளிக்காததால், தனிப்படை போலீசார் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். வீட்டை காலி செய்து சென்றது தெரிந்தது. ஆனாலும் வீட்டை ஆய்வு செய்ததில், இறந்த பெண் முகத்தில் சுற்றப்பட்டிருந்த பாலிதீன் கவர், டேப் கிடந்தன. தொடர்ந்து அபினாஷ் சாகு வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், வக்கீல் ஒருவருக்கு, 6 லட்சம் ரூபாய் அனுப்பியது கண்டறியப்பட்டது. வீட்டருகே உள்ளவர்களிடம் விசாரித்தபோது, அந்த வீட்டில் சிறுமி வேலை செய்ததும், அபினாஷ் சாகு வீட்டை காலி செய்வதற்கு முன் சிறுமியை காணாததும் தெரிந்தது. அவரது வீட்டு சமையல்காரரிடம் விசாரித்தபோது, தனது சொந்த ஊரான ஒடிசாவில் இருந்து, குழந்தையை பார்த்துக்கொள்ள, சிறுமியை அழைத்து வந்தது தெரிந்தது. அபினாஷ் சாகு புதிதாக பயன்படுத்திய சிம்கார்டு மூலம், ஒடிசாவுக்கு தப்பியதும் தெரிந்தது.சேலம் தனிப்படை போலீசார் ஒடிசா சென்று, அக்.,29ல் அபினாஷ் சாகு, அவரது மனைவி அஸ்வின் பட்டிலை கைது செய்தனர். கொலை சம்பவம் பெங்களூருவில் நடந்ததால், பெங்களூரு காவல் துறைக்கு வழக்கை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ