உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 26 பேர்

ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 26 பேர்

பள்ளிகொண்டா, பள்ளிகொண்டா அருகே, ஆம்னி பஸ் தீப்பிடித்து முழுவதும் எரிந்து நாசமான நிலையில், 26 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து, 26 பயணிகளை ஏற்றிக்கொண்டு, ஆதித்யா என்ற தனியார் ஆம்னி பஸ் பெங்களூரு நோக்கி சென்றது. நேற்று அதிகாலை, 1:30 மணியளவில், வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரிக்கும்--கொல்ல மங்கலத்திற்கும் இடையே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. இதையறிந்த டிரைவர், பஸ்சை சாலையோரம் நிறுத்தி பார்த்தார். ஆனால் பஸ்சின் அடியிலும் தீப்பிடித்து எரிந்ததை கண்டு டிரைவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பஸ்சில் இருந்த, 26 பயணிகளிடம் தகவல் தெரிவித்தார். பயணிகள்அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். அதற்குள் தீ மளமளவென பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.இது குறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கும், குடியாத்தம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தாலும், பஸ் முழுதும் எரிந்து சாம்பலானது. இதில் பஸ், பயணிகளின் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகின. டிரைவரின் சாதுரியத்தால், 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு ஆம்னி பஸ் எரிந்ததால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மாற்று வழியில் போலீசார் வாகனங்களை அனுப்பி வைத்தனர். மேலும், மீட்கப்பட்ட பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.தீ விபத்து குறித்து, பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ