ஆக்கிரமிப்பு புகார் குறித்து விசாரணை தாசில்தாருடன் மக்கள் வாக்குவாதம்
ஆத்துார், தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் உள்ள மூப்பனார் கோவிலை சுற்றியுள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக, மக்கள் ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினியிடம் நேற்று முன்தினம் மனு அளித்தனர். இதுதொடர்பாக தலைவாசல் தாசில்தார் பாலாஜி தலைமையில் அலுவலர்கள், நேற்று விசாரிக்க கோவில் பகுதிக்கு வந்தனர். அப்போது விசாரித்த தாசில்தார், 'ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் நபர்கள், பட்டா வைத்துள்ளதாக கூறுகின்றனர்' என கூறினார். அதற்கு மக்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும், 'தனி நபருக்கு ஆதரவாக, வருவாய்த்துறையினர் செயல்படுகின்றனர். பட்டா குறித்து விசாரிக்க வேண்டும்' என, மக்கள் முறையிட்டனர். இதனால் தாசில்தார், 'பட்டா குறித்து விசாரணை செய்யப்படும்' என கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.