கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தை குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள்
கெங்கவல்லி, குடிநீர் கேட்டு காலி குடங்களுடன், கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி, 12வது வார்டு அண்ணா நகர், சிவசக்தி நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், ஓராண்டுக்கு மேலாக சீரான குடிநீர் வினியோகம் இல்லை. சில இடங்களில், குடிநீர் வழங்காததால், விலைக்கு வாங்கி குடிநீர் அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று காலை, 11:00 மணியளவில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன், கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தொடர்ந்து, நுழைவு பகுதியில் காலி குடங்களுடன் அமர்ந்து, குடிநீர் வழங்கக்கோரி கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ., சந்திரசேகர், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர், '10 நாட்களில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார். அதன்பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.