இடஒதுக்கீட்டில் மருத்துவ வாய்ப்பு மாணவருக்கு மக்கள் பாராட்டு
கெங்கவல்லி, 'கெங்கவல்லி, கொண்டையம்பள்ளியை சேர்ந்த, வக்கீல் ஜோதிக்குமார் மகன் ஜோதிதர்ஷன். இவர், கூடமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து, நீட் தேர்வில், 421 மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், கோவை தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்துள்ளார்.அந்த பள்ளியில் இருந்து, முதன் முதலில், இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த ஜோதிதர்ஷனுக்கு கூடமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நேற்று நடந்தது.அதே ஊரைச் சேர்ந்த, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, ஊர் முக்கிய பிரமுகர்கள், மாணவரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். தெடாவூர் அரசு பள்ளியில் இரு மாணவியர், தம்மம்பட்டி மகளிர் பள்ளியில் ஒரு மாணவியுடன் சேர்த்து, கெங்கவல்லி தாலுகாவில், இந்தாண்டில், 4 பேர், அரசின் இடஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.