மாயமானவர் அடித்துக்கொலை? 4 பேரிடம் போலீஸ் கிடுக்கி
சேலம்;சேலம், வீராணம் அருகே சுக்கம்பட்டி சின்னனுாரை சேர்ந்தவர் மலர்கொடி, 54. இவரது மகன் சதீஷ்குமார், 30. இவரது பாட்டி, சேலம், சின்னதிருப்பதியில் இறந்தார். அதில் பங்கேற்க, சதீஷ்குமார், கடந்த, 18ல் வந்தார். அப்போது அங்கு சகோதரர்களுடன் ஏற்பட்ட தகராறால், அங்குள்ள கூட்டுறவு சங்கம் அருகே அமர்ந்திருந்தார். பின் அவர் மாயமானார். மறுநாள் மலர்கொடி புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் அவரை, 4 பேர் கடத்திச்சென்றதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரித்த நிலையில், நேற்று, 4 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:காரில் சதீஷ்குமாரை பவானிக்கு அழைத்துச்சென்று, அடித்து ஆற்றில் வீசியதாக கூறினர். இருப்பினும் முன்னுக்கு பின் முரணாக, 4 பேரும் பேசுகின்றனர். இருப்பினும் சதீஷ்குமார் குறித்து தகவல் தெரிந்தால் தான் உண்மை தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.