மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்கு
சேலம், சேலம் அருகே, கருப்பூர் குள்ளக்கவுண்டனுாரை சேர்ந்தவர் சத்யபிரியா, 36. இவருக்கும், மேட்டூரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும், 2010ம் ஆண்டு திருமணமானது. கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, 2011ல், விவாகரத்து பெற்றனர்.இந்நிலையில் சத்யபிரியாவுக்கும், அவருடன் படித்த வினோத்குமார் என்பவருக்கும், 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாதனா, 7, என்ற பெண் குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சத்யபிரியாவிற்கும், வினோத் குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சத்யபிரியா, அவரது தந்தையுடன் வசித்து வருகிறார். குழந்தை சாதனாவுடன் வினோத் குமார் வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறை என்பதால், சாதனாவை சத்யபிரியா அழைத்து சென்று வீட்டில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் மாலை சாதனாவை, வினோத்குமாரிடம் ஒப்படைக்கவில்லை. இது குறித்து கருப்பூர் போலீசில் வினோத்குமார் புகார் செய்தார். விசாரணைக்காக சத்தியபிரியா, அவரது அண்ணன் சுதர்சன் ஆகியோர் இரண்டு சக்கர வாகனத்தில் கருப்பூர் ஸ்டேஷன் வந்தனர்.பின்னர் போலீசார் இரு தரப்பையும் விசாரித்து, எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். பிறகு சத்யபிரியா, அவரது அண்ணன் சுதர்சன் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சிறிது துாரம் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் காரில் வந்த வினோத்குமார், சத்யபிரியா சென்ற இரண்டு சக்கர வாகனத்தை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து கீழே விழுந்த சத்ய பிரியா, அவரது அண்ணன் சுதர்சன் ஆகியோரை கடுமையாக தாக்கினர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினர்.இது குறித்து, சத்யபிரியா கருப்பூர் போலீசில் வினோத்குமார் மீது புகார் செய்தார். அதுபோல சத்யபிரியா மீது வினோத்குமார் புகார் செய்தார். இதன்பின், தன்னை சத்யபிரியா தாக்கியதால் படுகாயமடைந்ததாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதேபோல சத்ய பிரியா, வினோத்குமார் தாக்கிவிட்டதாக கூறி, ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். குழந்தை சாதனா தற்போது தாயார் சத்யபிரியாவிடம் உள்ளது.மனைவியை தாக்கி கொலை செய்ய முயற்சிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.