பொங்கல் பண்டிகை: சாமந்தி பூ அறுவடைக்கு தயார்
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையில் ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையை ஓட்டி அமைந்துள்ள வேப்பனஹள்ளி, நாச்சிக்குப்பம், கத்திரிப்பள்ளி, நடுசாலை, குருபரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள், 500 ஏக்கருக்கு மேல் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். விழா காலங்களில் சாமந்தி பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம்.இங்கு சாகுபடி செய்யப்படும் மலர்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலம் கோலார், கே.ஜி.எப்., காமசமுத்திரம், ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், பலமேனரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்நிலையில் வேப்பனஹள்ளி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் பொங்கல் பண்டிகையையொட்டி, சாமந்தி பூக்கள் சாகுபடியில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரங்களில் பொங்கல், கோவில் திருவிழாக்களுடன் கூடிய எருதுவிடும் விழாக்களுக்கு பூக்கள் தேவை அதிகரிக்கும் என்பதால், வேப்பனஹள்ளி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் அதிகளவில் சாமந்தி செடிகள் நடவு செய்துள்ளனர். புத்தாண்டு தினத்தன்று சாமந்தி பூ, கிலோ 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனையானது. எதிர்வரும் பொங்கலுக்கு விலை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. பரவலான மழையால் பூக்கள் விளைச்சலும் கைகொடுத்துள்ளது' என்றனர்.