இணைப்பு கால்வாய் பணி முடித்து ஏரிகளை நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்
தாரமங்கலம், டிச. 24-காவிரி உபரிநீர் திட்டக்கால்வாய் பணி இரண்டில், நங்கவள்ளி ஏரியில் இருந்து வைரன் ஏரி இணைப்பு கால்வாய் பணியை விரைந்து முடித்து, வழியில் உள்ள நான்கு ஏரிகளுக்கு உபரி நீர் செல்ல நடவடிக்கை வேண்டும். அதேபோல் பணி இரண்டில், வாத்தியாம்பட்டி ஏரி இணைப்பு பணி முடிந்துள்ள நிலையில், வழியில் உள்ள நரியம்பட்டி உட்பட ஐந்து ஏரிகளுக்கு, உபரிநீர் மோட்டர்களை இயக்கி ஏரிகளை நிரப்ப வேண்டி, தமிழக அரசை வலியுறுத்தி செலவடை சின்ன ஏரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு, செலவடை ஊராட்சி தலைவர் குமார் தலைமை வகித்தார். இதில் காவிரி உபரிநீர் மூலம் எங்கள் ஏரிகளை நிரப்ப, இணைப்பு கால்வாய் பணியை முடிக்க தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு மாநில செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஜெயவேல், இராமிரெட்டிபட்டி பா.ம.க., பிரமுகர் தன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.