ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் மனு
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே, பச்சமலை ஊராட்சி, வேப்படி பாலக்காடு கிராமத்தில், பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையை, சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், 40க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர், அவ்வழியாக விளை நிலத்திற்கு சென்று விளை பொருட்கள் எடுத்து வர முடியாத சூழல் உள்ளது.நேற்று, வேப்படி பாலக்காடு பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த தாசில்தார் நாகலட்சுமி, பொதுமக்களிடம், 'சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார். அதன்பின், அவர்கள் கலைந்து சென்றனர்.