1,100 கிலோ புகையிலை பறிமுதல் ராஜஸ்தான்காரர் கைது; 3 பேர் ஓட்டம்
சேலம்:சேலம், வீராணம் போலீசார், நேற்று முன்தினம் இரவு ஆச்சாங்குட்டப்பட்டி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த, எம்.ஜி., - கிரட்டா கார்களை நிறுத்தும்படி, போலீசார், 'சைகை' காட்டிய நிலையில் நிறுத்தாமல் சென்றனர்.பின் விரைந்து சென்ற போலீசார், ஒரு காரை சுற்றிவளைத்து மடக்கினர். ஆனால் அதிலிருந்த டிரைவர் உள்பட இருவர், தப்பி ஓடிவிட்டனர். அதேபோல் மற்றொரு காரை, சுக்கம்பட்டியில் போலீசார் மடக்கிய நிலையில், அதிலிருந்து டிரைவர் தப்பினார். அதேநேரம் காரில் இருந்த மற்றொவரை, போலீசார் பிடித்து விசாரித்தனர்.அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹரிராம், 23, என்பதும், அந்த காரில், 567 கிலோ புகையிலை இருப்பதும் தெரிந்தது. மற்றொரு காரில், 533 கிலோ புகையிலை இருந்தது. இரு கார்களுடன், 1,100 கிலோ புகையிலை பொருட்களை, பறிமுதல் செய்த போலீசார், ஹரிராமை கைது செய்து, மற்ற, 3 பேரை தேடுகின்றனர்.