தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் பலி
வாழப்பாடி, வாழப்பாடி அருகே, தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து, ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழந்தார்.உதகையில் இருந்து, சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ், 26 பயணிகளுடன் சென்றது. திருநெல்வேலியை சேர்ந்த ஜான்ராஜ் பஸ்சை ஓட்டி சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:50 மணிக்கு, சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி வைகை பள்ளி அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் சென்றது.அப்போது, திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் டிரைவர் ஜான்ராஜ், பயணிகள் ராதாகிருஷ்ணன், ஜோதிமணி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.வாழப்பாடி போலீசார் அவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இங்கு சிகிச்சை பெற்று வந்த, சென்னை பெரம்பூர் ஸ்ரீனிவாசா ராகவா தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம், 59, நேற்று அதிகாலை உயிரிழந்தார்.இதுகுறித்து சண்முகம் மகன் கோபி கிருஷ்ணன், 30, அளித்த புகார்படி வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில்' தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தபோது, கார் ஒன்று குறுக்கே சென்றதால், நிலைதடுமாறி ஆம்னி பஸ் கவிழ்ந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,' என்றனர்.