பள்ளி கட்டடம் கேட்டு ஏற்காட்டில் சாலை மறியல்
ஏற்காடு, ஏற்காட்டில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ளது பட்டிபாடி நடூர் கிராமம். இங்கு, அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. 51 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் பழுதடைந்துள்ளது. எனவே, கட்டடத்தை புதுப்பித்து தரக்கோரி மாணவர்களின் பெற்றோர், அதிகாரிகளிடம் பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.ஆனால் புதுப்பிக்காததால், நேற்று காலை மாணவ, மாணவியர், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், சாலை மறியல் செய்தனர். ஏற்காடு இன்ஸ்பெக்டர் வாசுகி, பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு உடன்படாத அவர்கள், உயர் அதிகாரிகள் வராமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.பின்னர் வந்த ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவகுமார், வட்டார கல்வி அலுவலர் கிரிஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய பள்ளி கட்டடம் கட்ட இரு இடங்கள் பார்த்துள்ளதாகவும், அதில் ஒரு இடத்தை விரைவில் தேர்வு செய்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.