ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., சிக்கினார்
ப.வேலுார்:விவசாயியிடம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, நல்லுார் எஸ்.ஐ., கெங்காதரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் கெங்காதரன், 47, எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருகிறார். நல்லுார் அருகே நடந்தை சாலப்பாளையத்தை சேர்ந்த சவுமியாராஜ், 30; விவசாயி. அவரது பக்கத்து நிலத்துக்காரர் முத்துசாமியுடன், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன், நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக சில தினங்களுக்கு முன், சவுமியாராஜை அழைத்த எஸ்.ஐ., கெங்காதரன், வழக்கை சாதகமாக முடிக்க, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத சவுமியாராஜ், இது குறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய அறிவுரையின்படி, நேற்று மாலை நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, ரசாயன பவுடர் தடவிய, 30 ஆயிரம் ரூபாயை, எஸ்.ஐ., கெங்காதரனிடம், சவுமியாராஜ் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், கெங்காதரனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.