சம்பளம் தர மறுத்து தாக்கியதால் சேலம் தொழிலாளி தற்கொலை
சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம், ஒட்டப்பட்டி ஏரிக்காட்டை சேர்ந்த சிவமூர்த்தி மகன் ராஜா, 25, கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி சுரேஷுடன், வீடு கட்டுமான பணிக்கு சென்று வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில், 10 நாள் தங்கி சுரேஷ், ராஜா பணியில் ஈடுபட்டனர். ஆனால், 15 நாட்களாகியும் ராஜாவுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷிடம் கேட்டபோது, சம்பளம் தரமுடியாது எனக்கூறி சிலருடன் சேர்ந்து தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த ராஜா, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் நேற்று தனியாக இருந்த ராஜா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரிப்பட்டி போலீசார் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ராஜா தற்கொலை செய்த இடத்தில் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், சென்னையில் கட்டுமான பணிக்கு சுரேஷுடன் சென்று வேலை செய்தேன். 10 நாள் வேலைக்கு அவர்கள் கூறியபடி சம்பளம் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது சிலர் என்னை தாக்கினர். இதனால் அங்கிருந்து தப்பித்து வந்த நான், வேதனை தாங்காமல் இறக்க போகிறேன், எனக்கு சம்பளம் தர மறுத்து தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு விழிப்புணர்வு மரணம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ராஜாவை தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது பெற்றோர் தரப்பில், காரிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.