ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்
சேலம்: ஆயுத பூஜையை முன்னிட்டு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பட்டறைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களில் பூஜை செய்வது வழக்கம். வீடுகளிலும் பூஜை செய்து வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைக்கப்படும். இதனால் நேற்று, சேலம் டவுன் கடைவீதி, பால் மார்க்கெட், உழவர் சந்தைகளில், சுவாமி கும்பிடுவதற்கு தேவையான பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதற்கேற்ப பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது.கடைகளில் பொரி கிலோ, 80 ரூபாய், பொட்டுக்கடலை, 140, சிவப்பு சுண்டல், 100, நிலக்கடலை, 160, கற்கண்டு, 65, நாட்டு சர்க்கரை, 80, அவுல், 60, குங்குமம், விபூதி, ஊதுபத்தி, கற்பூரம் பாக்கெட், 10 ரூபாய் என விற்பனையானது. முக்கிய சாலையோரங்களில் தற்காலிக கடைகளிலும் பொருட்கள் விற்பனை, திருஷ்டி பூசணி வியாபாரம் நடந்தது. பூசணி கிலோ, 35 முதல், 40 ரூபாய்க்கு விற்பனையானது. உழவர் சந்தையில் ஆப்பிள் கிலோ, 140 முதல், 150 ரூபாய், கொய்யா, 50 - 70, மாதுளை, 180 -200, சாத்துக்குடி, 70 - 80, வாழைப்பழம், 35 - 80, வாழைக்கன்று உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது. டவுன் கடைவீதியில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் மாநகரின் முக்கிய சாலைகளிலும் நெரிசல் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனிடையே, தனியார், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை வழிபாடு நடந்தது. மல்லி கிலோ ரூ.1,000சேலம் வ.உ.சி., மார்க்கெட்டில் பூக்கள் வாங்க நேற்று வியாபாரிகள், மக்கள் கூட்டம் அலைமோதியது. அதற்கேற்ப விலையும் உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ, 500க்கு விற்ற மல்லி, நேற்று, 1,000 ரூபாயாக உயர்ந்தது. அதேபோல், 240க்கு விற்ற முல்லை, 600; 260க்கு விற்ற ஜாதிமல்லி, 280; 240க்கு விற்ற காக்கட்டான், 280; 160க்கு விற்ற கலர் காக்கட்டான், 240; 240க்கு விற்ற மலை காக்கட்டான், 300 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், 120க்கு விற்ற சம்பங்கி, 300; 160க்கு விற்ற சாதா சம்பங்கி, 400; 160க்கு விற்ற அரளி, 350; 250க்கு விற்ற வெள்ளை அரளி, 350; 250க்கு விற்ற மஞ்சள் அரளி, செவ்வரளி தலா, 450; 80க்கு விற்ற நந்தியாவட்டம், 260, 150க்கு விற்ற சின்ன நந்தியாவட்டம், 400 ரூபாய் என விலை உயர்ந்தது. வாழப்பாடியில் பல்வேறு இடங்களில் பூசணிக்காய் விற்பனையில் விவசாயிகள், வியாபாரிகள் ஈடுபட்டனர். அங்கு கிலோ, 20 முதல், 30 ரூபாய் வரை விற்பனையானது. ஏராளமானோர் பூசணிக்காய் வாங்கிச்சென்றனர். அதேபோல் ஆயுத பூஜைக்கு தேவையான மளிகை பொருட்கள், பூக்கள், பழங்கள், பொரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க, மக்கள் அதிகளவில் வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குவிந்தனர்.